Recent Posts

Sukanya Samriddhi Yojana Scheme - சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் - செல்வ மகள் சேமிப்புத் திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?

சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் - விண்ணப்பிப்பது எப்படி?


செல்வ மகள் சேமிப்புத் திட்டமானது பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு திட்டமாகும். 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் , தபால் அலுவலகங்களிலோ அல்லது வங்கிகளிலோ இக்கணக்கினை துவங்கலாம். இத்திட்டம் அதிக வட்டி தரக்கூடிய சேமிப்பு திட்டம் என்பதால் மிகச் சிறந்த சேமிப்புத் திட்டமாகக் கருதப்படுகிறது.


வட்டி எவ்வளவு கிடைக்கும்?

01-04-2020 முதல் ஆண்டுக்கு 7.6% வட்டி கிடைக்கும். இதில் ஆண்டுக்கு ஒருமுறை வட்டி கணக்கிடப்பட்டு வரவு வைக்கப்படுகிறது.


குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச வைப்பு தொகை எவ்வளவு?

ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சமாக ரூ.250/- முதல் அதிகபட்சமாக ரூ.1,50,000/- வரை வரவு வைக்கலாம். வைப்பு தொகையானது ரூ.50/-ன் பெருக்குதொகையாக இருக்க வேண்டும். அதாவது ரூ.50, ரூ.100, ரூ.150, ரூ.200.... கடைசி இரு எண்கள் 50 அல்லது 00 என்பதில் முடிவடையும். ஒரு மாதத்தில் அல்லது ஒரு நிதியாண்டில் எத்தனை முறை வேண்டுமானாலும் வைப்பு தொகையினை செலுத்தலாம்.


விதிமுறைகள் என்னென்ன?

  • கணக்கு துவங்கியதிலிருந்து அதிகபட்சமாக 15 ஆண்டுகள் வரை வைப்பு தொகை செலுத்தலாம்.
  • ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250/- செலுத்த வேண்டும். செலுத்தவில்லை எனில் செயல்பாட்டில் இல்லாத கணக்காக கருதப்படும்.
  • மீண்டும் செயல்பாட்டில் கொண்டு வர வைப்பு தொகையோடு செயல்பாட்டில் இல்லாத ஆண்டுகளுக்கு  ரூ.50 வீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.
  • வருமான வரிச் சட்டம் 80C பிரிவின் கீழ் வைப்புத்தொகை மற்றும் வட்டி ஆகியவை வரி விலக்குக்கு தகுதி பெறுகிறது.


கணக்கை துவங்குவது எப்படி?

  • பத்து வயதிற்குள் உள்ள பெண் குழந்தைகளின் பெயரில் குழந்தையின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள்  இந்த கணக்கினை துவங்கலாம்.
  • பெண் குழந்தையின் பெயரில் ஒரு கணக்கினை மட்டுமே துவங்க முடியும்.
  • இந்த கணக்கினை அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கிகளில் துவங்க முடியும்.
  • ஒரு குடும்பத்தில் இரு பெண்குழந்தைகளுக்கு மட்டுமே இக்கணக்கினை துவங்க இயலும். ஒரே பிரசவத்தில் இரட்டை அல்லது மூன்று பெண் குழந்தைகள் பிறந்திருந்தால் விதிவிலக்கு அளிக்கப்படும்.
  • பெண் குழந்தை 18 வயதை அடையும் வரை பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள்  இந்த கணக்கினை இயக்கலாம்.


பணத்தை திரும்ப பெறுவது எப்படி?

  • பெண் குழந்தை 18 வயதை அடைந்த பின் அல்லது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் வைப்பு தொகையில் பாதியை அதன் முந்தைய நிதியாண்டில் விண்ணப்பித்து பெறலாம்.
  • வைப்பு தொகையை முழுவதுமாகவும் அல்லது தவணை முறையிலும்(ஆண்டுக்கு ஒருமுறை என அதிகபட்சமாக ஐந்து வருடம்) தேவைகளை பொருத்து(கல்வி) பெறலாம்.
  • கணக்கு துவங்கப்பட்ட தேதியிலிருந்து 21 ஆண்டுகளுக்குப் பிறகு அல்லது பெண் குழந்தை 18 வயதை அடைந்த பிறகு திருமணத்தின் போது (திருமணத்திற்கு 1 மாதம் முன் அல்லது 3 மாதத்திற்கு பின்) முழு தொகையினை பெறலாம்.


முன்கூட்டியே கணக்கை மூட முடியுமா?

கணக்கு துவங்கியதிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு கணக்கு வைத்திருப்பவரின் மரணம் அல்லது உயிருக்கு ஆபத்தான நோய் அல்லது கணக்கை இயக்கிய பெற்றோர் அல்லது பாதுகாவலரின் மரணம் போன்ற காரணகளுக்காக முழுமையான ஆவணங்கள், விண்ணப்பம் படிவம் மற்றும் பாஸ் புத்தகத்துடன் சம்பந்தப்பட்ட தபால் நிலையத்தில்/வங்கியில் சமர்ப்பித்து மூடலாம்.

Comments