Recent Posts

ONLINE PATTA TRANSFER - இணையவழி பட்டா மாற்றம் - விண்ணப்பிப்பது எப்படி?

இணையவழி பட்டா மாற்றம் - விண்ணப்பிப்பது எப்படி?

ஒவ்வொரு கிராமத்திலும் நில உரிமையாளர்களைக் காட்டும் பதிவேடுகள் மற்றும் கணினி தரவுத்தள விவரங்கள்  சரியானதாகவும், தற்போதுள்ள நிலையைக் குறிப்பிடுவதாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறு உண்மையான உரிமையாளர்கள் மற்றும் உண்மையான அனுபவதாரர்களின் பெயர்கள் நில உரிமைப் பதிவேட்டில் மற்றும் கணினி தரவுத்தளத்தில் பதியப் பெற்றிருந்தால்தான், நில உரிமைதாரர்கள் தங்களது உரிமையை நிலைநாட்ட இயலும். பொதுவாக பட்டா மாறுதல்  விண்ணப்பங்கள்,  நிலங்கள்  உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் செய்யப்பட வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும்,  உட்பிரிவு செய்யப்பட தேவையற்ற இனங்களில் 15 நாட்களிலும் பதிவு மாறுதல் செய்யப்படும்.


முதலில் இணையவழி பட்டா மாற்றத்திற்கு சம்பந்தப்பட்ட பட்டா, சிட்டா என்பவை என்னவென்று தெரிந்துகொள்வோம். 

  • பட்டா என்பது ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
  • சிட்டா என்பது குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
  • வில்லங்க சான்று என்பது  ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
  • புல எண் என்பது நில அளவை எண்.
  • வாரிசு சான்று என்பது யாரெல்லாம் ஒரு நபரின் வாரிசுத்தறார்கள் என்பதை குறிக்கும் ஆவணம். வாரிசுதாரர்கள் இறந்த நபரின் சொத்துக்களை வாரிசு அடிப்படையில் தங்களின் பெயரில் பட்டா மாற்றம் செய்ய இயலும்.
  • தாய்பத்திரம் அல்லது மூலபத்திரம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.

இரண்டவது, இணையவழி பட்டா மாற்றத்திற்கு சம்பந்தப்பட்ட நிலத்தின் அளவுகளை பற்றி அறிந்து கொள்வோம்.

பொதுவாக கணினி நில ஆவணங்களில் ஹெக்டர்-ஏர்ஸ்-சதுர மீட்டர் (Hectares-Ares-Square Metres) என்ற அளவுகளில் குறிக்கப்படும். அதன் வடிவம் 0.00.00 என குறிக்கப்படுகிறது.

1 ஹெக்டேர் = 100 ஏர்ஸ் = 10000 ச.மீட்டர்  = 2 ஏக்கர் 47 சென்ட்

1 ஏர்ஸ் = 100 சதுர மீட்டர் =  2. 47 சென்ட் = 1௦76 சதுர அடி

1 சதுர மீட்டர் = 1௦.76391 சதுர அடி

1 ஏக்கர் = 100 சென்ட் = 4௦.5 ஏர்ஸ் = 4046.82 ச.மீட்டர்

1 சென்ட்௦. 4௦5 ஏர்ஸ் = 4௦.5 சதுர மீட்டர் = 435 ச.அடிகள்


மூன்று வகையான பட்டா மாறுதல்கள் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

அ.நிலத்தில் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் (INVOLVING SUB DIVISION - PATTA TRANSFER)

உதாரணமாக விண்ணப்பதாரர் ஒரு ஏக்கர் நிலம் வைத்துள்ளதாக வைத்துக்கொள்வோம். அதில் ஒரு பகுதியை மட்டும் வேரொரு நபருக்கு எழுதிக்கொடுக்கிறார். அப்போது அந்த நிலத்தை உட்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்யலாம்.

ஆ.நிலத்தில் உட்பிரிவு செய்யப்பட தேவையற்ற பட்டா மாறுதல் (NOT INVOLVING SUB DIVISION - PATTA TRANSFER)

உதாரணத்திற்கு அதே விண்ணப்பதாரர் ஒரு ஏக்கர் நிலம் முழுவதையும் வேரொரு நபருக்கு எழுதிக்கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். அப்போது அந்த நிலத்தை உட்பிரிவு செய்ய தேவையில்லை. அந்த நிலத்தை உட்பிரிவு இல்லா  பட்டா மாற்றம் செய்யலாம் (SIMPLE OR FULL FIELD PATTA TRANSFER). மேலும் இந்த பட்டா மாறுதல் மூலம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களை ஒரு பட்டாவில் இருந்து நீக்கியும் சேர்த்தும் கொள்ளலாம் (JOINT PATTA TRANSFER).

இ.இணைத்தல் பட்டா மாறுதல் (CLUBBING - PATTA TRANSFER)

உதாரணத்திற்கு ஒரே பட்டா எண், நில வகை, நில வரி, மண் வகையை சார்ந்த இரண்டு நிலங்கள் (Ex. 123/1A, 123/1B) அருகருகே இருப்பதாக வைத்துக்கொள்வோம். அவற்றை இணைத்தல் பட்டா மாறுதல் மூலம் இணைத்து (Ex.123/1) ஒரு நிலமாக பட்டா மாற்றம் செய்யலாம்.


இணையவழி பட்டா மாற்றம் செய்ய இணைக்கப்பட வேண்டிய அசல் ஆவணங்கள்

அ.கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டியவை

1. வில்லங்கச் சான்று

2. பத்திர ஆவணங்களில் கிரையம் கொடுத்தவர்கள் மற்றும் வாங்கியவர்கள் விவரம் அடங்கிய பக்கங்கள்

3. சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரம் பதிவு செய்யப்பட்ட விவரங்கள் மற்றும் கைரேகையை காட்டும் பின்புற பக்கங்கள்

4. ஆவணத்தில் உள்ள தபசில் சொத்து விவர பக்கங்கள்

ஆ.தேவையின் பேரில் இணைக்கப்பட வேண்டியவை

5. மூல ஆவண விவரங்களின் தொடார்ச்சி

6. வாரிசு சான்றிதழ்

7. இறப்பு சான்றிதழ்

இ.அடையாள ஆவணங்கள் (இவற்றில் ஏதேனும் ஒன்று)

1. குடும்ப அட்டை

2. வாக்காளார் அடையாள அட்டை

3. ஓட்டுநார் உரிமம்

4. கடவுச் சீட்டு

5. நிரந்தர வருமானவாரி கணக்கு எண் அட்டை 

6. ஆதார் அடையாள அட்டை


விண்ணப்பிக்கும் முறை

  1. அருகிலுள்ள அரசு இ-சேவை மையத்தை (Common Service Centre) அணுகவும்


சேவை கட்டணம் - ரூ.  60 /- 


பரிசீலிக்கப்படும் வட்டம்

பட்டா மாற்றம் செய்ய வேண்டிய நிலம் அமைந்துள்ள வட்டம்(Taluk)

பரிசீலனை செய்யும் அலுவலர்கள்


1. நிலத்தில் உட்பிரிவு செய்யப்பட தேவையற்ற பட்டா மாறுதல்

கிராம நிர்வாக அலுவலர்
(Village Administrative Officer)
மண்டல துணை வட்டாச்சியர்
(Zonal Deputy Tahsildar)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

2. நிலத்தில் உட்பிரிவு செய்து பட்டா மாறுதல்

குறுவட்ட நில அளவர்
(Firka Surveyor)
நில ஆவண வரைவாளர்
(Land Record Draftsman)
தலைமை நில அளவர்
(Head Surveyor)
வட்டாச்சியர்
(Tahsildar)
(ஏற்பு (அ) தள்ளுபடி செய்பவர்)

Comments